Breaking News

சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்” – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

 புதுடெல்லி:

சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.


இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியபோது இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இந்திய-சீன உறவுகள் தற்போது ஒத்துழைப்புக்குத் திரும்பும் நேர்மறை போக்கைக் காட்டுகின்றன. இரு நாடுகளும் ஒன்றையொன்று போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும்.

இந்தியா-சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாம் கடந்த காலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.


முக்கிய அண்டை நாடுகளாகிய இந்தியா-சீனா, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் இணைந்து வாழ்வதற்கும், வளர்ச்சிக்காக வளங்களை முதலீடு செய்யவும் வேண்டும். நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்த சீனா தயாராக உள்ளது.

இரு நாடுகளும் இணைந்து அமைதியான, வளமான, பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தடைகளை நீக்கி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் கிழக்கின் இரண்டு பெரிய நாகரீகங்களின் மறுமலர்ச்சி பரஸ்பர நன்மை பயக்கும். மேலும், இது ஆசியாவுக்கும் உலகிற்கும் உறுதியையும் நிலைத்தன்மையையும் வழங்கும்.

280 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடன் உலகின் மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா, உலகளாவிய பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, சர்வதேச உறவுகளில் பன்முகமயமாக்கல் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்று அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:

“இந்தியா-சீனா உறவுகள் மூன்று ‘பரஸ்பரக் கொள்கைகள்’ – பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு, பரஸ்பர நலன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

நமது உறவுகள் சிரமமான காலக்கட்டத்திலிருந்து முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், இரு தரப்பினரும் திறந்த மனப்பான்மையுடனும், பயனுள்ள அணுகுமுறையுடனும் செயல்படுவது அவசியம்.

இன்றைய பேச்சுவார்த்தையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சினைகள், யாத்திரைகள், மக்கள்-மக்கள் தொடர்புகள், நதி தொடர்பான தரவு பகிர்வு, எல்லை வர்த்தகம், இணைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. மேலும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்த விவாதங்கள், இந்தியா-சீனா இடையே நிலையான, ஒத்துழைப்பு நிறைந்த மற்றும் எதிர்கால நோக்கமுள்ள உறவை உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments