தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்து .. நொறுங்கிப்போன இன்னோவா கார்.. பாரபத்தியில் பரபரப்பு!
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை மதுரை அருகே பாரபத்தியில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் நிர்வாகிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக 6 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1.5 லட்சம் இருக்கைகள் :
மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகள் மாநாட்டுத் திடலில் போடப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் நடந்து வந்து தொண்டர்களைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளன. கொள்கைத் தலைவர்களுக்கான பேனர்கள், தவெக கொடி உள்ளிட்டவை நடப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தவெக தலைவர் விஜய், மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார்.
100 அடியில் கொடிக்கம்பம் :
இதற்காக 100 அடியில் கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநாட்டின் முன் பகுதியில் கிரேன் மூலமாகக் கொடிக் கம்பத்தை நடும் பணிகள் செய்யப்பட்டு வந்தன.
கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்து
ஆனால் திடீரென கிரேன் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றை இணைக்கும் பெல்ட் கழன்றது. இதனால் கொடிக்கம்பம் சரியத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த அனைவரும் பதறி ஓடினர்.
தொடர்ந்து கொடிக்கம்பம் சாய்ந்து அங்கு நின்றிருந்த தவெக நிர்வாகி ஒருவரின் கார் மீது விழுந்தது. இன்னோவா கார் மீது விழுந்ததில், அதன் மேல் பாகம் மொத்தமாக நொறுங்கியது. இந்த கொடிக்கம்பத்தின் எடை மட்டும் 10 டன்னாகும். விஜய் கொடியேற்றவிருந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது அக்கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் கொடிக்கம்பம் விழுந்ததில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கொடிக்கம்பத்தை நிறுவ ஒரேயொரு ரோப் மட்டுமே பயன்படுத்தியது தான் இந்த விபத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், தவெக கொடிக்கம்பம் விழுந்த காரை உடனடியாக அக்கட்சி நிர்வாகிகள் பதாகைகளைக் கொண்டு மூடினர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது கொடிக்கம்பத்தை அங்கிருந்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் கூடுதல் பாதுகாப்புடன் தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
A 100-foot flagpole prepared for the Tamilaga Vettri Kazhagam (TVK) state conference in Madurai collapsed onto a car during installation. Fortunately, no casualties were reported, though the vehicle was badly damaged.
No comments
Thank you for your comments