காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழா – 323 நெசவாளர்களுக்கு ₹148.32 லட்சம் நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம், ஆக. 8:
மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எம்எல்ஏக்கள் க. சுந்தர், எழிலரசன், மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறித்துறை துணை இயக்குநர் ச. மணிமுத்து வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் ஆர். காந்தி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியையும் பார்வையிட்டார். தொடர்ந்து, 18 நெசவாளர்களுக்கு கௌரவ விருதுகள், 24 நெசவாளர்களுக்கு ₹107.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் (சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்), 25 நெசவாளர்களுக்கு ₹0.30 லட்சம் மதிப்பிலான முதியோர் ஓய்வூதிய உதவிகள் உள்ளிட்ட, மொத்தம் 323 நெசவாளர்களுக்கு ₹148.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் ஆர். காந்தி தனது உரையில், “சுதேசி இயக்கம் குறித்த பிரகடனத்தை நினைவுகூரும் வகையில், 2015 முதல் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினரை ஈர்க்கவும், உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ஆடைகளையே பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் மலர்க்கொடி குமார், ஊராட்சிக் குழுத் துணைத்தலைவர் நித்யா. சுகுமார், முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் முத்துசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments