Breaking News

ரயில்வே தண்டவாளத்தில் நின்று மறிலில் ஈடுபட்ட பொதுமக்கள்





காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே லெவல் கிராசிங் கடந்து செல்லும் வையாவூர் சாலையில் கரடுமுரடான சாலையால் விபத்துக்குள்ளான பெண்மணியுடன் இணைந்து ஏராளமான பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அந்த ரயில்வே கேட்டை கடந்து வையாவூர்,களியனூர் என வாலாஜாபாத் என பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும் வையாவூர் பகுதி வளர்ந்து வரும் நகர விரிவாக்க பகுதியாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ரயில்வே கேட் தண்டாவாளத்தில் கடக்கும் சாலையில் கற்கள் சரியாக பதிக்கப்படாமல் இருந்து வருகிறது.இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலரும் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து பலமுறை ரயில்வே காவலர்கள் மற்றும் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தும் சாலையை செப்பணிடும் பணியை மேற்கொள்ளாததால் நாள்தோறும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவரும் விபத்துக்குள்ளாகி ரத்த காயங்களுடனே செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வையாவூர் பகுதியை சேர்ந்த யோகா ஆசிரியர் தேன்மொழி என்கிற பெண்மனி ஒருவர் பணி நிமிர்த்தமாக வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது தவறி விழுந்து இடது கையில் காயங்கள் ஏற்பட்டது. 

உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை தண்டவாளத்தின் குறுக்கே நிறுத்தி அலட்சியமாக இருந்துவரும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையெடுத்து ரயில்வே காவலர் வந்து இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறுகையில்,

நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கும் நிலையில் இதை சீர் செய்ய நிர்வாகம் முன் வராததை கண்டித்து அவருடன் தனி நபராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும் உரிய அதிகாரிகள் நேரில் வந்து உரிய உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட சிலரும் அவ்வழியாக வந்த பொதுமக்களும் இதைக் கண்டு அவருக்கு ஆதரவாகவும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் ரெயில்வே அலுவலருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை அதிகாரி 24மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் நிர்வாக புகார் புத்தகத்தில் புகாரினை பதிவு செய்த பின்னர் போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து அங்கிருந்து களைந்து சென்றார்.

சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில் 3.30மணி அளவில் வரவிருந்த நிலையில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் ஒருவர் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களுடன் பொதுமக்களும் பரபரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி ரயில்வே நிர்வாகத்தினர் இடையே அதிர்ச்சி அடைந்தனர் .

No comments

Thank you for your comments