Breaking News

பள்ளிகளில் ப வடிவ இருக்கைக்கு அரசு உத்தரவு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

காஞ்சிபுரம், ஜூலை 17: 

பள்ளிகளில் ப வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கட்டாயமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான அடைவுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பா.தமிழ்ச்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி வரவேற்று பேசியதோடு தரவரிசையின் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில் காஞ்சிபுரம் மாவட்டம் 12 வதாக நடத்தப்படும் கூட்டமாகும்.அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் நன்றாக மனதில் உள்வாங்கிக் கொண்டு அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். 

அரசுப்பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,மாவட்ட கல்வி அலுவலர்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து பேசியிருக்கின்றனர். எனவே ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியம் இருந்தால் அது குறித்து முடிவெடுக்கப்படும்.

ப வடிவில் மாணவர்கள் இருக்கை என்பது சோதனைக் கட்டத்தில் தான் உள்ளது.அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் ப வடிவில் தான் அமர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை, எங்கெல்லாம் பயனுள்ளதாக உள்ளதோ அங்கெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது இருக்கைக்கான ஆலோசனை மட்டுமேயாகும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments