காஞ்சிபுரத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் சமரச மையம் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு மையத்தில் சமரசமாக தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சமரச மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளை சமரசம் செய்து வைப்பதில் பயிற்சி பெற்ற அனுபவமுடைய தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் மத்தியஸ்தர்களாக இருந்து, இரு தரப்பினரும் தாமாகவே பேசி வழக்கை சமரசம் செய்து தீர்வு பெற வழிவகை செய்து வருகிறார்கள்.
தேசிய சட்டப் பணிகள் ஆணையம், தேசிய மத்தியஸ்தம் மற்றும் சமரச திட்ட ஆணையம் உத்தரவின் பேரிலும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் "For Nation" Campaign for Mediation என்ற தேசிய அளவிலான பரப்புரைக்காக, சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி செம்மல் அவர்கள் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது காமராஜர் சாலை, இந்திரா காந்தி சாலை, பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. சண்முகம், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments