Breaking News

காஞ்சிபுரம் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து – ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

 காஞ்சிபுரம், ஜூலை 14:

காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் செயல்பட்டு வந்த மரச்சாமான்கள் உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.


அந்த பகுதியில் அமைந்துள்ள 'சாய் எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் மரத்துகள்கள், உடைந்த பலகைகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக குவிக்கப்பட்டிருந்தன.

வெப்பச்சலனம் மற்றும் பலத்த காற்று வீச்சின் காரணமாக, மரப்பொருட்களுக்கு திடீரென தீப்பிடித்து, அது விரைவில் பரவி விட்டது. தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

தொழிற்சாலையில் வடமாநிலத்திலிருந்து வந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். அவர்கள் சமையலறையில் செய்த பிழையால் தீப்பொறி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்சேதம் எதுவும் இல்லை என்பது மகிழ்ச்சியான தகவல்.

இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments