முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் - அமைச்சர் துரைமுருகன் தகவல்
சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை நலமாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, திமுகவில் இணையும் நிகழ்வில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக் குச் சென்றனர்.
அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் பி.ஜி.அனில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
‘முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போ லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதற்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
“முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பங்கேற்பதாக இருந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நலம் விசாரிப்பு:
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், மநீம தலைவர் கமலஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தனர்.
No comments
Thank you for your comments