அரசு அதிகாரிகள் அரசு அதிகாரிகள் போல் நடந்து கொள்ள வேண்டும் - செல்வப் பெருந்தகை வேதனை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புணரமைப்பு பணிகள் முடிவுற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது
இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்துடன் முருக பெருமானை வணங்கினர்.
இந்நிலையில் மூலவர் விமானத்தின் மீது புனித நீர் ஊற்றுவதற்கு முன்பு தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் மேலே சென்றுவிட்டார் ஆனால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகையை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் மேலே ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி என்பதால் தடுத்து நிறுத்தியது தெரிய வந்தது அதன் பின்னர் திமுக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் முறையிட்டதால் மூலவர் விமானத்தின் மேலே செல்ல அனுமதித்தனர்.
இது தவிர புனித நீர் ஊற்றுவதற்கு முன்பு கொடியை அசைப்பதற்கு கூட சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் செல்வப் பெருந்தகையிடம் தராமல் அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜதுரையே கொடியசைத்தார். அந்த நேரத்தில் செல்வப் பெருந்தகை முகம் வாடியது.
பின்னர் குடமுழுக்கு விழா முடிந்து கீழே வந்த பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, 2000 ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகிறது, ஒரே இரவில் இதனை மாற்றிவிட முடியாது என்றும், தமிழக அறநிலையத் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் போல் நடந்திருக்க வேண்டும் முறையான திட்டமிடல் இல்லாமல் இந்த விழாவை கடமைக்கு நடத்தி உள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்கு யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரியவில்லை மக்களுக்கும் முக்கியத்துவம் தரவில்லை மக்கள் பிரதிநிதியான எனக்கும் முக்கியத்துவம் தரவில்லை. சரியாக திட்டமிடல் இல்லாமல் கடமைக்கு நடத்தி உள்ளனர் திட்டமிடல் இருந்திருந்தால் இன்னும் இந்த விழா சிறப்பாக இருந்திருக்கும். கடைசியில் நான் இறைவனை கூட தரிசிக்காமல் குன்றத்தூர் செல்கிறேன் என்று வேதனை தெரிவித்தார்.
முன்னாள் ஆளுநருக்கு முக்கியத்துவம் தந்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய நிகழ்வு யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரியாமல் முறையான திட்டமிடல் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வல்லக்கோட்டை கோவில் நிர்வாகத்தின் செயலற்ற திறனையே உணர்த்துகிறது.
No comments
Thank you for your comments