Breaking News

அனுமதியின்றி இயங்கி வரும் கிரஷர்கள் குவாரிகள் மீது புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கிரஷர்கள் குவாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.



காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கிரஷர்கள் குவாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை மற்றும் புகார் மனுவினை அளித்தனர். 


தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில்,

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த அனைத்து கலெக்டர்களையும் சந்தித்து, தொடர்ந்து நாங்கள் புகார் அளித்து வருகிறோம். ஆனால் புகார் அளித்த இரண்டு தினங்களுக்கு மட்டுமே அது வீரியத்துடன் இருக்கும். இரண்டு தினங்களுக்கு பிறகு அந்த மனு மற்றும் புகார் மீதான நடவடிக்கை நீர்த்துப் போய்விடும் என்பது தொடர்கதையாகி வருகிறது.

ஆனால் இம்முறை தமிழ்நாடு கனிமவளத்துறை ஆணையர் அவர்கள் தமிழகத்தில் அனுமதி பெற்றுள்ள அனைத்து கிரஷர் குவாரிகளின் பட்டியலை வழங்கியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 162 கிரஷர் மற்றும் 30க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வந்ததில் அரசின் கனிமங்கள் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அனுமதி இல்லாமல் இயங்கும் மதூர் பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கனிமங்களை

சுரண்டியுள்ளனர், களவாடியுள்ளனர் என்பதோடு மட்டுமல்லாமல் இதனால் அரசுக்கு எவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்த 5 ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் ட்ரோன் மூலமாக அளவீடு செய்து பட்டியலிட வேண்டும், அனுமதி இல்லாமல் இயங்கிய அனைத்து கிரஷர் குவாரிகளுக்கு திருடப்பட்ட அளவிற்கு இரு மடங்கு, மூன்று மடங்கு அபராதம் விதிக்க வேண்டும். 

இந்த கால கட்டங்களில் பொறுப்பில் இருந்த அனைத்து சுரங்கத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளின் துணையோடு தான் இந்த குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய கல்குவாரியிலிருந்து எடுத்து வரப்படும் கனிமங்களுக்கு முழுமையான நடைசீட்டு உள்ளனவா என்பதை கவனிக்கவும், கிரஷர்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கற்கள் மற்றும் எம்.சாண்ட் போன்றவற்றிற்கு நடைசீட்டு  உள்ளனவா என்பதை கண்காணிக்கவும், அனைத்து கிரஷர்களிலும் எடை மேடை உள்ளனவா என்பதையும் அனைத்து கல்குவாரிகளில் இருந்து கிரஷர்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஆனால் கனிமவளத்துறையில் ஒவ்வொரு குவாரிகள் மற்றும் கிரஷர்களிலும் ஆட்கள் நியமித்து கண்காணிக்க போதுமான அளவிற்கு அத்துறையில் ஆட்கள் இல்லை. இதனை சரிசெய்ய தனியார்  மூலமாக ஒவ்வொரு குவாரி மற்றும் கிரஷருக்கும் ஆட்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். 

இதன் மூலம் தங்கள் மாவட்டத்தில் எவ்வளவு கிரஷர் குவாரிகள் இயங்குகிறது என்பதையும் அதில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுத்து அதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகளின் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதனோடு இம்மாவட்டத்தில், இத்துறையில் நடந்திருக்கும் சுரண்டல், ஊழல், முறைகேடுகளையும் உண்மை தன்மையுடன் கண்டறிய தனிக்குழு அமைத்து விசாரணை செய்து கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவரின் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கு தாங்கள் ஒரு பாடம் புகட்டிட வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.






No comments

Thank you for your comments