Breaking News

காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைப்பு

 காஞ்சிபுரம்:

மனித சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை பிரிவின் சார்பில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.


இவ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தாரை தப்படை பேண்ட் வாத்தியங்கள் மற்றும் கரகாட்டக் கலை நிகழ்ச்சிகளுடன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், “போதைவிலக்கு” பதாகைகள் ஏந்தியவாறு, உணர்வு கீதங்களை முழக்கத்துடன் காங்கோ பாணியில் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், வல்லல்பச்சைப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்ற இப்பேரணி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

வழியெங்கும் பொதுமக்களிடையே போதைப்பொருள் சேவனத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரகாட்டக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளுடன் பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை காவல் துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று விழிப்புணர்வுக்கு வலுசேர்த்தனர்.

“போதை ஒழிக்கப் போவோம் – புதுமை உலகம் உருவாக்குவோம்” என்ற முழக்கம் காஞ்சிபுரம் நகரின் வீதிகளில் ஓங்கி ஒலித்தது.

No comments

Thank you for your comments