உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம்,ஏப்.17:
மக்களைத் தேடிச் சென்று மக்களை குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் திட்டமே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமாகும்.இத்திட்டத்தின் கீழ் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசூர் கிராமத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மருத்துவம்பாடியில் பெருநகர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட விவசாய பயன்பாட்டிற்கான பேலர் இயந்திரத்தை பார்வையிட்டு எவ்வாறு செயல்படுகிறது என கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து திருப்புலிவனம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.26.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார்.தொடர்ச்சியாக உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தினையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளப் பா.ஜெயஸ்ரீ, சுகாதாரப்பணிகள் துறையின் துணை இயக்குநர் நளினி,மாவட்ட வழங்கல் அலுவலர் சி.பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments