எடமச்சி கிராமத்தில் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் - ஆட்சியரிடம் கோரிக்கை
காஞ்சிபுரம், மார்ச்.1:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே எடமச்சி கிராமத்தில் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனுவினை வெள்ளிக்கிழமை அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அதன் தலைவர் தா.பாலாஜி தலைமையில் அக்கிராம விவசாயிகள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அக்கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.
எடமச்சி கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.எங்கள் கிராம விவசாய நிலங்களுக்கு 407 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த ஏரி 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்த ஏரிக்கு அருகில் மலை அடிவாரத்தில் கல்குவாரி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது. அவ்வாறு குவாரி அமைந்தால் கல்குவாரியிலிருந்து வரும் கழிவு நீர் ஏரியில் கலக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருக்கும் நீர்வாழ் உயரினங்கள்,மீன்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்பு அடைய அதிக வாய்ப்புள்ளது.
சுமார் 32 அடி உயரம் உடைய ஏரிக்கரையானது கல்குவாரியால் உடையும் அபாயம் ஏற்படும்.ஏரிக்கழிவு நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் போது விளைநிலங்களும்,கால்நடை மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கப்படவாய்ப்புள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ஆட்சியர் அவர்கள் எடமச்சி கிராமத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என்ற கோரிக்கை மனுவினை வழங்கியதோடு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் ஆட்சியரிடம் விளக்கி கூறினார்கள்.
No comments
Thank you for your comments