சிறு குறு பத்திரிகைகளை ஒடுக்கும் முயற்சி – தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு செய்தியாளர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதை நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் வன்மையாக கண்டிக்கிறது.
பல ஆண்டுகளாக முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்றிருந்த பல பத்திரிகையாளர்கள் திடீரென அடையாள அட்டையை இழந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை பெறுவது பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவும், சிறு குறு பத்திரிகைகளை அழிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் வலியுறுத்தும் கோரிக்கைகள்:
- PRGI Annual Statement அடிப்படையில் அனைத்து செய்தி நிறுவன செய்தியாளர்களுக்கும் அங்கீகார அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நடுத்தரம் மற்றும் சிறு குறு செய்தி நிறுவனங்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- Accreditation Committee முன்னணி நிறுவனங்களை மட்டுமே பார்க்கும் அணுகுமுறையை மாற்றி, சிறு குறு பத்திரிகைகளின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
- பத்திரிகையாளர் நலவாரியத்தில் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
- அங்கீகார அட்டை வழங்கும் முறையை சீர்திருத்தி, மறைமுக பாகுபாடுகள், பொருளாதார தாக்குதல்கள், வர்த்தக நோக்கம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, 2025 ஆம் ஆண்டிற்கான பத்திரிகையாளர் அங்கீகார அட்டையை அனைத்து தகுதியான செய்தியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்செய்தி அறிக்கையை நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ளார். மேலும், சிறு குறு பத்திரிகைகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments