காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான விளக்கொளிப்பெருமாள் கோயில் தெரு,காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளில் ஒன்று காந்தி சாலை மற்றும் அதனையொட்டி ஒருவழிப்பாதையாக இருந்து வரும் விளக்கடி கோயில் தெரு.காந்தி சாலையில் பிரபலமான பட்டு விற்பனையகங்கள், வங்கிகள், உணவகங்கள் ஆகியன அதிகம் இருப்பதால் அவற்றுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு சென்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு காவல்துறையினரால் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்திருக்கும் நிலையில் 4 சக்கர வாகனங்கள் எதிர்திசையில் அதிகமாக வருவதாலும், சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பழவண்டிகள்,தள்ளுவண்டிகள் ஆகியன நிரந்தரமாக நிற்பதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
விளக்கடி கோயில் தெருவில் 4 வங்கிகள்,4 திருமண மண்டங்கள்,பள்ளிகள்,செல்போன் மற்றும் பட்டு விற்பனையகங்கள்,5 முக்கிய கோயில்கள் ஆகியன அதிகம் உள்ள பகுதியில் ஒரு புறம் சாலையோரத்தில் மினிவேன்களும்,மறுபுறம் பழவண்டிகள்,தள்ளுவண்டிகளும் நிரந்தரமாக நின்று கொண்டே இருக்கின்றன. விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவிலிருந்து காந்தி சாலை செல்ல எதிரில் ஒரு குறுக்குச்சாலை அமைந்திருப்பதாலும் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு மற்றும் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் பழவண்டிகள்,தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது காந்தி சாலையில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அவ்வப்போது காவலர்கள் மூலம் அகற்றி வருகிறோம்.
நிரந்தரமாக எந்த வாகனமும் நிற்பதில்லை.காந்தி சாலையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்ல பல்வேறு சீர்திருத்தங்களையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.
விளக்கடி கோயில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக பழ வண்டி ஒன்றும் தள்ளு வண்டி ஒன்றும் நிரந்தரமாக நிற்பது கவனத்துக்கு வந்தது.
அவர்களை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். ஒரிரு நாட்களில் வேறு இடம் பார்த்து விட்டு காலி செய்வதாக தெரிவித்துள்ளனர் என்றார்.
No comments
Thank you for your comments