காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், பிப்.18:
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ செயலாளர் கே.ஜீவா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜி.விஸ்வநாதன், ஏஐடியூசி செயலாளர் ஏ.மூர்த்தி, ஐஎன்டியூசி செயலாளர் எல்.வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.வள்ளிநாயகம் தொடக்கி வைத்தார்.சிஐடியூ கைத்தறி சம்மேளன தலைவர் இ.முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
கூட்டுறவு சங்க நெசவாளர்களின் கூலிப்பணத்தை வங்கிக்கு அனுப்பும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்,கூட்டுறவு சங்க உரிமைகளை மறுக்காதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் குழு நிர்வாகிகள் ஜி.லட்சுமிபதி, ஏ.யுவராஜ், ஆர்.டி.சேகர், ஏ.கேசேவன் உட்பட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக காஞ்சிபுரம் கீரை மண்டபத்திலிருந்து ஊர்வலமாக காமாட்சி அம்மன் காலணி பகுதியில் உள்ள கைத்தறித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் துணை இயக்குநரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
No comments
Thank you for your comments