Breaking News

உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள் - ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் பேச்சு

காஞ்சிபுரம், பிப்.19:

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் வைரவிழாவில் பணி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.


காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் வைரவிழா பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி நீதிபதி வி.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.அறக்கட்டளையின் செயலாளர் சி.துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். 

கல்லூரி முதல்வர் பி.முருககூத்தன் வரவேற்று பேசி கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை விவரித்து பேசினார். விழாவில் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் பேராசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லூரி பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி பணி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப்பணத்தை வீணாக்காமல் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். உரிமைகளை பேசிக்கொண்டு கடமைகளை விட்டு விடாதீர்கள். சீனாவில் கடமையை மட்டும் செய்கிறார்கள். உரிமைகளை கேட்பதில்லை.

அதனால் சீனா வியத்தகு முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாடுகளே மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.படிப்பில் மாணவர்கள் வெற்றி பெறலாம். 

ஆனால் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற போதைப்பொருளுக்கும், மதுவுக்கும் அடிமையாகி விடக்கூடாது. போதைப் பொருளுக்கு அடிமையானால் புற்றுநோய் வந்து அவதிப்படும் நிலை வந்து விடும். மதுவுக்கு அடிமையானால் குற்றவாளிகளாகி விடுவோம். 

தமிழகத்தில் சினிமாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது .இதனால் தான் பல நடிகர்கள் முதல்வராக ஆசைப்படுகிறார்கள் என்றும் பேசினார்.

நிறைவாக கல்லூரியின் பொருளியல் துறை பேராசிரியர் என்.பழனிராஜ் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments