காஞ்சிபுரத்தில் சமூக சேவகரைப் பாராட்டிய பச்சையப்பன் பள்ளியின் பழைய மாணவர்கள்
காஞ்சிபுரம், பிப்.16:
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985 முதல் 1987 ஆம் ஆண்டு வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளியில் படித்த பழைய நினைவுகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடல் நிகழ்வுக்கு பழைய மாணவரும் ஒருங்கிணைப்பாளருமான வி.கண்ணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் கீர்த்திநாதன், ஆசிரியர் முரளிகிருஷ்ணன், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை சுமித்ரா பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பத்மனாபன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதைச் சடலங்களை நல்லடக்கம் செய்தது,சாலையோரங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு தினசரி உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை தனது சொந்த செலவில் செய்து வரும் பணி ஓய்வு பெற்ற தலைமைக்காவலரான சீனிவாசனை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்கள்.
இதனையடுத்து விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 6 மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.ஏழை மாணவரான ஹரிஹரனுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்விச்செலவை ஏற்றுக் கொள்வதாகவும் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அறிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் பழைய மாணவர்களான அரசு சோலார் எனர்ஜி திட்ட இணை செயலாளர் சரவண விநாயகம், நியாய விலைக்கடைகளுக்கான உதவி இயக்குநர் குழந்தைவேலு, தொழிலதிபர் பத்மனாபன்,வரதராஜப் பெருமாள் கோயில் எழுத்தர் கிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments