காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி காய்கறி சந்தை திறப்பு
காஞ்சிபுரத்தில் 115 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ராஜாஜி காய்கறி சந்தை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ராஜாஜி காய்கறி சந்தை. ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச்சந்தை தொடங்கி 115 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நிலையில் கட்டிடம் சேதமடைந்தும்,சுகாதார சீர்கேடாகவும், மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருந்தது.
எனவே பழமையான காய்கறி சந்தை இருக்கும் இதே இடத்தில் புதியதாக காய்கறி சந்தை கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.இவர்களது கோரிக்கையை ஏற்று கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இச்சந்தை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்ற இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தது.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் 248 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் கடைக்கான வாடகை தொகைகள் நிர்ணயித்து சந்தை வியாபாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக மின் இணைப்புகள்,கம்பிக் கதவுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்து ராஜாஜி காய்கறி சந்தை திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக கட்டப்பட்ட ராஜாஜி காய்கறி சந்தையை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் காய்கறி விற்பனையையும் தொடக்கி வைத்தார்.
இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநகரின் மையத்தில் ராஜாஜி காய்கறி சந்தை செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பொதுமக்களும்,வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தற்காலிகமாக ஓரிக்கையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையும் மூடப்பட்டது.
No comments
Thank you for your comments