Breaking News

உறவினர்களை கத்தியால் குத்திய தாய், மகன் உட்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை- காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம், பிப்.1:

உறவினர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தாய்,மகன் உட்பட 3 பேருக்கு காஞ்சிபுரம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது இறப்புக் காரியத்துக்கு உறவினர்கள் சிலர் வராமல் இருந்துள்ளனர். ஏன் வரவில்லை என்ற காரணத்தைக் கேட்க சுங்குவார்சத்திரம் அருகே எட்டுக்குட்டி மேடு என்ற கிராமத்திற்கு சந்தானத்தின் மகன் சதீஷ், தாயார் பொன்னம்மாள் மற்றும் சதீஷின் நண்பர்கள் இருவர் உட்பட 4 பேர் உறவினர் ராஜேஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சதீஷ்,பொன்னம்மாள் மற்றும் நண்பர்கள் இருவரையும் ராஜேஷ் மற்றும் ராஜேஷின் தாயார் மல்லிகா உட்பட 6 பேர் சேர்ந்து கட்டை மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

கடந்த 4.4.2014 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் டி.ரமேஷ்குமார் ஆஜரானார்.

வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி கே.எஸ்.அருண் சபாபதி சதீஷ் குடும்பத்தினரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற ராஜேஷ்(29) இவரது தாயார் மல்லிகா(40) மற்றும் ராஜேஷின் நண்பரான சந்திரசேகர் என்ற சேட்டு(26)ஆகிய மூவருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபரதாமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற குற்றவாளிகளான முத்து(40),குமார்(38)ரமேஷ்(36) ஆகிய மூவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 3 பேரும் அபராதத் தொகை ரூ.3 ஆயிரத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இத்தீர்ப்பை தொடர்ந்து 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ்,இவரது தாயார் மல்லிகா மற்றும் ராஜேஷின் நண்பர் சந்திரசேகர் என்ற சேட்டு உள்ளிட்ட மூவரும் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments

Thank you for your comments