காஞ்சிபுரத்தில் 20 முதல்வர் மருந்தகங்கள் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.



காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் விரைவில் செயல்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கா.சு.கந்தசாமி,ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதன் பின்னர் கண்காணிப்பு அலுவலர் கூறுகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமும்,தொழில் முனைவோர் முலமாகவும் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இவற்றுக்கு மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.

இம்மருந்தகங்களில் ஜெனரிக் வகை மருந்துகளும்,பிற மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16, தொழில் முனைவோர்கள் மூலமாக 4 சேர்த்து மொத்தம் 20 முதல்வர் மருந்தகங்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மருந்தக உரிமமும் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,சார் ஆட்சியர் ஆஷிக் அலி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments