Breaking News

தேவரியம்பாக்கத்தில் பழமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம், ஜன.22:

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பளிங்கு கல்லால் ஆன புத்தர் சிலையை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தினர் புதன்கிழமை கண்டறிந்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில் பஜனைக்கோயில் எனப்படும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகில் உள்ள குப்பைகள் நிறைந்து கிடந்த பகுதியில் பழமையான புத்தர் சிலை ஒன்று கிடப்பதாக வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமாருக்கு தகவல் கிடைத்தது.அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் கொடுத்த தகவலின்படி அவரது தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது பளிங்கு கல்லால் செய்யப்பட்டதும்,மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும்,தியானத்தில் அமர்ந்த நிலையில் ஓரடி உயரமுள்ள புத்தர் சிலை கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து அஜய்குமார் கூறுகையில் இப்புத்தர் சிலை கடந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இச்சிலையில் புத்தரின் கண்கள் மூடிய நிலையில் தியானத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.இடதுபுற தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும்,தலையில் சுருள்முடி அமைப்பும், பின்புற மேலாடை நேர்த்தியாக தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தின் பெருமாள் ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிலையும் வைத்து வழிபட்டிருக்கலாம்.இத்தகவலை தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், உதவி கல்வெட்டு ஆய்வாளர்கள் நாகராஜன்,பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்து உறுதி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments