Breaking News

176 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்- மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர்கள் வழங்கினர்.

காஞ்சிபுரம், ஜன.22:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மொத்தம் 176 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஆர்.காந்தி மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னேரி,கட்டவாக்கம்,பழையசீவரம்,ஊத்துக்காடு, வாரணவாசி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.இம்முகாம்களில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இலவச வீட்டு மனைப் பட்டா 85,குடும்ப அட்டை 16, மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் 13,ஊட்டச்சத்து பெட்டகம் 34 பேர் உட்பட மொத்தம் 176 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.பல்வேறு கோரிக்கைகளை தொடர்பாக 165 மனுக்களும் பெறப்பட்டு உரிய தீர்வும் காணப்பட்டது.

முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம்,எம்எல்ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜாபாத் ஒன்றியக்குழுவின் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன்,துணைத்தலைவர் சேகர் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments