விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ்
காஞ்சிபுரம், டிச.20:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை இணை இயக்குநர் முருகன் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.11,41,845 மதிப்பில் பவர் டில்லர்கள்,வேளியூர் மற்றும் ராஜகுளம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 23 விவசாயிகளுக்கு ரூ.17.65 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உட்பட மொத்தம் 36.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் உத்தரமேரூரில் புறவழிச் சாலை அமைப்பதால் 150 ஏக்கர் விவசாயம் பாழாகிறது என கூறியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பதிலளிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் எழுந்து பதில் கூற முற்பட்ட போது ஏன் மாவட்ட அதிகாரி வரவில்லை.அவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
பின்னர் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வராத மாவட்ட அளவிலான அதிகாரிகள் யார்,யாரென்று கணக்கெடுத்து அவர்கள் அனைவருக்கும் வராததற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் ஆட்சியர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகள்,பாலங்களை அடிக்கடி நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பேசினார்.
கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments