மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் உதவி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 143 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 21.86 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
மேலும் அமைச்சர் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்று வருகிறது.
சமூகம், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவே இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 10060 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு புதியதாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 5 வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நபர் ஒருவருக்கு ரூ.2000/- வீதம் 3032 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வருமான உச்ச வரம்பின்றி கல்வித்தகுதியின் அடிப்படையில் ரூ.25000 மற்றும் தம்பதிகளில் ஒருவர் பட்டதாரியாக இருந்தால் ரூ.50000மும் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும், இதர மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து கல்லூரி,பணிக்கு,
மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. நாளது வரை 628 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். சுயதொழில் வங்கிக்கடன் ரூ.75000 பரிந்துரையுடன் ரூ.25000 மானியமும்.
ஆவின் பாலகம் அமைக்க ரூ.50000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு 32 மாற்றுத்திறனாளிகள் ரூ.8.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாளது வரை 720 பயனாளிகளுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். பின்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.44 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களும், SBI-ன் சமூக செயலாற்றுகிற பொறுப்பின்கீழ், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) மூலம் 132 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.42 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களிடம் பெற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகள் “நிறைந்தது மனம்“ திட்டத்தின்கீழ் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments