காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்-அதிகாரிகள் சமரசம்
காஞ்சிபுரம், டிச.23-
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி குடியேறும் போராட்டம் நடத்த தயாரானார்கள்.
தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி, வட்டாட்சியர் மோகன்குமார், விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பி.பாபு தலைமை வகித்தார்.சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பி.பி.பாலாஜி,மாவட்ட செயலாளர் வி.முனுசிôமி,மாவட்ட பொருளாளர் வி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியிருக்க இடமில்லாமல் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளை பல மாதங்களாக அலைய விடும் அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தின் போது வலியுறுத்தினார்கள்.
பின்னர் அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனர்.
No comments
Thank you for your comments