மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருவெம்பாவை பாடும் சிறார்கள்
காஞ்சிபுரம், டிச.16:
பெரியகாஞ்சிபுரம் எஸ்விஎன் பிள்ளைத் தெருவில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில்.இக்கோயிலில் அதிகாலை பிரம்ம மூகூர்த்தத்தில் 100 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 200 சிறார்கள் திருவெம்பாவை பாடலை ராகத்துடன் பாடியவாறே முக்கிய வீதிகளில் வலம் வந்து கச்சபேசுவரர் கோயிலுக்கு வருகின்றனர்.
கோயிலில் சிவபெருமானை வணங்கி ஆலயத்தை வலம் வந்து சிறார்கள் ஊர்வலம் நிறைவு பெறுகிறது.இச்சிறார்களுக்கு தலைமை வகித்து அழைத்து வரும் காஞ்சிபுரம் செவ்வந்தீசுவரர் கோயில் ஓதுவார் க.பழனி கூறியது..
தொடர்ந்து 71 வது ஆண்டாக மார்கழி மாத பஜனை சிறார்களுடன் நடத்தி வருகிறோம்.5 வயதுக்கு மேல் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மட்டும் பஜனையில் கலந்து கொள்ளலாம்.அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டில் சாமி கும்பிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு தான் பஜனைக்கு வர வேண்டும்.
கண்டிப்பாக சிறுவர்கள் சட்டை அணியக்கூடாது.வருபவர்கள் திருவெம்பாவை பாடலை முழுமையாக பாட கற்றுக் கொடுக்கிறோம்.இவ்வாறு செய்வதன் மூலம் சிறார்களுக்கு சிவபக்தியின் மகிமை, அதிகாலையில் குளிப்பது, நடைப்பயிற்சி செய்வது,நல்ல ஒழுக்கத்துடன் இருப்பது ஆகியன தானாகவே வந்து விடும்.
பஜனை நிறைவு பெற்றதும் அனைத்து சிறார்களுக்கும் கோயில் பிரசாதமும், பிஸ்கட்டும் வழங்குகிறோம்.
சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலை 5 மணிக்கு பஜனைக்கு வந்து விடுவார்கள்.மார்கழி மாதம் முழுவதும் சிறார்கள் பஜனை நடைபெறும் என்றார்.
No comments
Thank you for your comments