Breaking News

குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பணிகள் குறித்து முதல்நிலை அலுவலர்களுடன் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி இன்று (18.12.2024)  காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் காலை 9 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் இணைந்து "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், பல்வேறு இடங்களையும், வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட கொல்லைமா நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்பு மேல்மா நகரிலுள்ள ஆதிதிராவிட தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ/ மாணவியர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். தொடர்ந்து மாங்காடு நகராட்சிக்குட்பட்ட நசரத்பேட்டையில் இயங்கிவரும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு, ஆய்வினை மேற்கொண்டு, பொருள்கள் இருப்புநிலை கேட்டறிந்து, இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டு, பொதுமக்களிடம் வழங்கப்படும் பொருள் தரத்தினை கேட்டறிந்தார்கள். பின்பு நகராட்சியிலுள்ள திருகுளத்தையும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியிலுள்ள குப்பை கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வினை மேற்கொண்டார்கள்.  

இவ்ஆய்வினை தொடர்ந்து குன்றத்தூர் நகராட்சி  அலுவலகத்தில்,  இன்று  காலை  முதல்    பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பணிகள் குறித்து முதல்நிலை அலுவலர்களுடன் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்     தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  மாவட்ட  வருவாய்  அலுவலர்                திரு.செ.வெங்கடேஷ்,  திருப்பெரும்புதூர்  வருவாய்  கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், குன்றத்தூர் நகர்மன்றத் தலைவர் திரு.கோ.சத்தியமூர்த்தி மற்றும்  அனைத்து  துறை  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தினை தொடர்ந்து  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆகியோர் மனுக்களை பெற்று,  குறைகளை கேட்டறிந்தார்கள்.

No comments

Thank you for your comments