திடீரென சுற்றுலா மையமாக மாறிய தாமல் ஏரி
காஞ்சிபுரம், டிச.22:
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது தாமல் ஏரி.மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் தாமல் ஏரியும் ஒன்றாகும்.10 மதகுகளும்,3 மிகைநீர் போக்கிகளோடும் உள்ள இந்த ஏரியின் மூலம் 938.380 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தாமல் கிராமத்தின் மேற்குப்பகுதியிலும்,தேசிய நெடுஞ்சாலையின் தெற்குப்பகுதியிலும் அமைந்துள்ளது.இந்த ஏரியின் மொத்த கரையின் நீலம் 6030 மீட்டர் ஆகும்.
பாலாறு அணைக்கட்டிலிருந்து இடது புறத்தில் பிரியும் காவேரிப்பாக்கம் கால்வாயில் கூண்மடை பகுதியின் வலது புறத்தில், கோவிந்தவாடி கால்வாயாக பிரிந்து, ஒச்சேரி வழியாக பயணித்து, அளவூர் அருகே தாமல் ஏரி வரவுக் கால்வாயாக ஏரிக்கு தண்ணீர் வந்து சேருகிறது.
இது தவிர கரிவேடு கிராமம்அருகே துவங்கும் பாம்புக்கால்வாய் எனப்படும் கச்சக்கால்வாய் மூலமும் தாமல் ஏரிக்கு நீர் வரத்து பெறுகிறது.
இந்த ஏரியின் மொத்தப்பரப்பு 6.20 ஏக்கராகும். சுமார் 5700 ஏக்கர் பாசனப்பரப்பும்,18.5 அடி ஆழமும்,சுமார் 6.20 ஏக்கர் பரப்புளவும் உடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பெரிய ஏரிகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பியது. இதில்தாமல் ஏரியும் அதன் முழுக் கொள்ளவான 18.5 அடியை எட்டி அதன் உபரி நீர் மிகைநீர் போக்கிகள்(கலங்கல்கள்) வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் இதை அறிந்த காஞ்சிபுரம்,தாமல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகள், குடும்பத்தினரோடு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தாமல் ஏரிக்கு திரண்டு வந்து அருவி போல வெளியேறும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.இதனால் திடீரென சுற்றுலா மையமாகவும் மாறிக் காட்சியளிக்கிறது தாமல் ஏரி.
பொதுமக்கள் அதிகமாக ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பாலுசெட்டி சத்திரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே தாமல் ஏரியும் அமைந்திருப்பதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களும் தாமல் ஏரியின் அழகையும், அதில் ஆனந்த குளியல் போட்டு வரும் பொதுமக்களையும் பார்த்து,ரசித்து,மகிழ்ந்து செல்கின்றனர்.
No comments
Thank you for your comments