காஞ்சிபுரத்தில் திருக்குறள் விளக்கப் புத்தகங்கள் கண்காட்சி - ஆட்சியர் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம், டிச.23:
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா கிளை நூலகம். இந்த நூலகத்தில் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவது தொடர்பான வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் விளக்கப் புத்தகங்கள் கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட நூலக அலுவலர் ரா.கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ச.திருவிற்கோலம், கலாம் யுவி அறக்கட்டளையின் தலைவர் ச.கலைவாணி,உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் ஆ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறிஞர் அண்ணா கிளை நூலகர் ப.ரவி வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன் விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து ஐயன் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் ஓவியங்கள், சிற்பங்கள்,மற்றும் திருக்குறள் விளக்கப் புத்தக கண்காட்சி ஆகியனவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து அரசு விருது பெற்ற காஞ்சிபுரம் மாணவர் நா.ரோகனைப் பாராட்டி ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவையொட்டி பேச்சுப்போட்டி, திருக்குறள் வினாடி வினாப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் ஆகியன குறித்த போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியனவும் டிச.24 ஆம் தேதி முதல் தொடர்ந்து டிச.31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட நூலகத்துறை சார்பில் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. நிறைவாக நூலகர் அ.கு.சுப்பிரமணி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments