மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை தலா ரூ.2 ஆயிரம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம், டிச.24:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், கோட்டாட்சியர் ஐ.சரவணக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.41 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது..
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த தையல் இயந்திரம் 45 வயதாக இருந்ததை 60 வயதாகவும், திறன் பேசிகள் வழங்குவது 60 வயதாக இருந்ததை 65 வயதாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டு வந்த இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இப்போது அந்த விதியை தளர்வு செய்து ஒரு கால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வழங்குகிறோம்.கடந்த ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15385 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதியதாக வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3032 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டை 625 பேருக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 720 பயனாளிகளுக்கு ரூ.3.55 கோடி மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
விழாவில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments