Breaking News

ஒரே நாடு ஒரே தேர்தல் - அமைச்சரவை ஒப்புதல்! - 2029ல் அமல்?

புதுடெல்லி :

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான விரிவான மசோதாவை அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ஒரே நாடு, ஒரே தேர்தல் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில், 

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. உலகில் சிறந்த நாடாக இந்தியா மாறிவிடும். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சியில் ஒரு தடை இருக்கிறது. அது அடிக்கடி தேர்தல்கள் நடப்பதுதான். நாட்டில் வேறு ஏதாவது நடக்கலாம் அல்லது நடக்காமல் இருக்கலாம். ஆனால், நாடு முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவைத் தேர்தல் வரும். ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பேரவைத் தேர்தல்களும் முடிந்துவிட்டன. அடுத்து இப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது” என்றார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையத்தின் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்தச் சட்டத்தின் மூலம் நடத்தப்படும். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Thank you for your comments