Breaking News

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா - தந்தை பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வைக்கம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவின் வைக்கத்தில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா”-வில், புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர்.


வைக்கம் போராட்டம் :

கேரளாவின் வேகத்தில் ஆலய நுழைவு போராட்டமான 'வைக்கம் போராட்டம்' இன்று வரை தென்னிந்திய மக்களால் நினைவு கூறப்படுகிறது. 30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் 'வைக்கம் போராட்டம்' ஆகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்த போராட்டக்காரர்கள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, அங்கிருந்தவர்கள் தந்தை பெரியாரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஏப்ரல் 13 அன்று வைக்கம் விரைந்த பெரியார், இந்த போராட்டத்தை வழிநடத்தினார். கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டதால் போராட்டம் மிகத் தீவிரமாகிறது.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தி கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை. கோட்டயம் மாவட்டத்துக்கு நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார்.

மே 22 ஆம் தேதி கைதான பெரியார் ஜூன் 21 விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31 விடுதலை செய்யப்பட்டார். 1925 ஆம் ஆண்டு காந்தியடிகள் வைக்கம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.

வைக்கம் போராட்ட ( 1924 - 25) காலத்தில் 114 நாட்கள் பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் இந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு ஆகும்.

நூற்றாண்டு நிறைவு விழா :

இந்த நிலையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (டிச.12) கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற்றது. இத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பெரியார் நினைவகம் திறப்பு :

இந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலைக்கு கீழ் இருக்கும் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர், புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகம், அருங்காட்சியகத்தை முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

விருது :

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தேவநூர மஹாதேவா அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதோடு சேர்த்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினார்.

No comments

Thank you for your comments