வன்னியர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு - காஞ்சிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
காஞ்சிபுரம், டிச.24:
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ சக்தி.கமலம்மாள், மாவட்ட தலைவர் உமாபதி,மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பூபாலன் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் பாமக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சித் தொண்டர்களுடன் இணைந்து இட ஒதுக்கீடு குறித்து கோஷங்களையும் எழுப்பினார்.
பின்னர் அவர் தொண்டர்களிடையே பேசியதாவது:-
உச்சநீதிமன்றமே வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்து 1000 நாட்கள் முடிந்தும் இதுவரை திமுக அரசு இடஒதுக்கீடு வழங்காமல் இருந்து வருகிறது.
இது சாதிப்பிரச்சினை அல்ல, பெரும்பாலான மற்றும் பட்டியலின சமுதாயத்தின் குரல்.இந்த சமுதாயம் வளர்ந்து விடக்கூடாது என திராவிடக் கட்சிகள் நினைக்கின்றன.
தீர்ப்புக்கு பிறகு பலமுறை 100க்கும் மேற்பட்ட முறை முதல்வரை,உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியும் எந்த பலனும் இல்லை.இட ஒதுக்கீட்டுக்காக 21 உயிர்களை இழந்தோம், ஏராளமானவர்கள் சிறை சென்றார்கள்.
தமிழக அரசைக் கேட்டால் மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுக்கை நடத்த வேண்டும் என்று சொல்லி தப்ப்க்கிறது.தொடர்ந்து 45 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
திமுக அமைச்சர்களில் ஒருவர் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்திருக்கிறது. மற்றொரு திமுக அமைச்சர் தேர்தலுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்கிறார்.
எங்களுக்கு தேர்தல் ஒரு பொருட்டே அல்ல,45 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறோம். வன்னியர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தர தயாராக இருக்கிறோம். நாங்கள் நீதிமன்ற தீர்ப்பின் படி 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தான் கேட்கிறோம்.
இட ஒதுக்கீட்டை தரவில்லையெனில் கிராமங்களிலும்,நகரங்களிலும் தெருத்தெருவாகவும்,வீடு வீடாகவும் சென்று வன்னியர்களின் விரோதி என்று பரப்புரை செய்வோம்.
தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். தெலுங்கானா, ஆந்திரா,கர்நாடகா, ஒடிஸா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.
துரை முருகன் திமுகவுக்கு பல தியாகங்களை செய்தவர், மூத்தவர். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்கலாம் என்றும் அன்புமணி ராதாஸ் பேசினார்.
No comments
Thank you for your comments