ஆலயத்துக்குள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும் - மேகாலயா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வேண்டுகோள்.
காஞ்சிபுரம், நவ.13:
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள சுக்ல யஜூர் வேத சாஸ்திரட பாடசாலையில் ஸ்ரீ யோகீஸ்வர மகரிஷியின் 115 வது ஜெயந்தி மகோற்சவம் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கி நவ.13 புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.
நிறைவு நாள் விழாவில் சுவாசினி பூஜை,கன்யா பூஜை,வடுக பூஜை ஆகியன நடைபெற்ற பின்னர் யோகீஸ்வர சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து பாடசாலை வளாகத்தில் வேதப்படிப்பையும், தேசிய திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 7 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
சான்றிதழ்களையும், புத்தாடைகளையும் மேகலாலயா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய பின்னர் பேசியது.
வேதங்கள் தான் இந்து மதத்தின் வேர்கள்.வேதங்களும் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம்,மனிதமேயம் ஆகியனவற்றை கற்றுத் தருகின்றன. கோயிலுக்குள் செல்லும் ஒவ்வொருவரும் எப்போது சென்றாலும் பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும்.
கேரளாவில் பாரம்பரிய உடையில் தான் செல்ல வேண்டியது கட்டாயமாக இருந்து வருகிறது. தமிழக கோயில்களிலும் இதனை கொண்டு வர வேண்டும்.
பாரம்பரிய உடையின் முக்கியத்துவத்தை இக்கால இளைய சமுதாயத்துக்கு விளக்க வேண்டும்.பொருள் தேடுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றாலும் திரும்பி வந்து நமது நாட்டுக்குத் தான் சேவை செய்ய வேண்டும்.
வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிவது அறியாமையே ஆகும்.நம் இந்திய நாட்டில் அனைத்து வளங்களும் உள்ள போது ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
முதியோர் பாதுகாப்பு மையங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.ஆனால் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடாமல் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.வைத்தியநாதன் பேசினார்.
விழாவிற்கு பாடசாலையின் தலைவர் கணபதி தலைமை வகித்தார்.சமூக சேவகர் கிருஷ்ண ஜெகன்னாதன்சமஸ்கிருத பாட ஆசிரியர்கள் ரங்கநாதன், சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாடசாலை ஆசிரியர் தனஞ்செயன் கணபாடிகள் வரவேற்று பேசினார்.விழாவில் ஆசிரியர்கள் பத்மா சுந்தரேசன்,ரேவதி நாகராஜன்,மைதிலி பிரகாஷ், சங்கர், ஜெ.சாவித்திரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

No comments
Thank you for your comments