காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஞ்சிபுரம், நவ.30:
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை இடைவிடாது சனிக்கிழமை நாள் முழுவதும் தொடர்ந்து கனமழையாகவே பெய்து கொண்டிருந்தது.
காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு,சங்கூசாபேட்டை,ஒலிமுகம்மது பேட்டை,மேட்டுத்தெரு,அரசு மருத்துவமனை சாலை,பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர்மழையானது சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை 193.80 மி.மீ அளவில் பெய்து கொண்டிருந்தது. அதே மழையானது 12 மணி முதல் 2 மணி வரை 136.50 மி.மீட்டராக குறைந்திருந்ததாலும் மழையானது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது.
பகல் 2 மணி நிலவரப்படி மொத்த மழையளவு 540.10 மி.மீட்டராகவும், சராசரி மழையளவு 90.02 மி.மீ ஆகவும் இருந்தது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.தீயணைப்புத்துறையினரும்,மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களும் உடனுக்குடன் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
காஞ்சிபுரம் 16,உத்தரமேரூர் 16,வாலாஜாபாத் 9,ஸ்ரீபெரும்புதூர் 2,குன்றத்தூர் 28 என மொத்தம் 62 நிவாரண முகாம்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பேரிடர்களை கண்காணிக்க 21 மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 276 ஜெசிபிக்கள்,155 மோட்டார் பம்புகள்,85 மர அறுப்பான்கள்,276லாரிகள் ஆகியனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.974 முதல் நிலை மீட்பாளர்கள்,500 தன்னார்வலர்கள் ஆகியோரும் தயார் நிலையில் இருந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை தொடர்ந்து சனிக்கிழமை நாள் முழுவதும் பெய்து கொண்டே இருந்ததாலும்,சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை காரணமாகவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.
No comments
Thank you for your comments