குருவிமலை கிராமத்தில் சாய்பாபா பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம், நவ.24:
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலை கிராமத்தில் சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், சர்வம் பைனான்சியல் அறக்கட்டளை மற்றும் சத்யசாய் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடினார்கள்.
விழாவிற்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் வெங்கடேசன்,குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
களக் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் நளினி டில்லிபாபு குத்து விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் 99 மாணவர்களுக்கு பாட நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியனவற்றை வழங்கினார்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளர் கிருபாகரன் 100 கிராமங்களை தத்தெடுத்து அவற்றின் மேன்மைக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கி கூறினார்.
விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிஷ்யா ஏழுமலை மற்றும் விஜயகுமார், குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.முன்னதாக சத்யசாய்பாபாவின் திருஉருவப் படத்துக்கு அனைவரும் மலர்தூவி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

No comments
Thank you for your comments