காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் கடைஞாயிறு விழா
காஞ்சிபுரம், நவ.24:
பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில். பழமையும்,வரலாற்றுச் சிறப்புகள் பலவும் உடைய இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தலை சார்ந்த நோய்கள் எதுவும் வராமல் இருக்கவும்,வந்த நோய்கள் அகலவும் வேண்டி மண் சட்டியில் அகல்விளக்கு ஏற்றி நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக கார்த்திகை மாத 2 வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறுவர்கள், பெரியோர்கள் உட்பட திரளான பக்தர்கள் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து அதில் அகல்விளக்கு ஏற்றி அதனை மண்சட்டியில் வைத்து தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஆலய மூலவர் கச்சபேசுவரரை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகத்தின் சார்பில் ரூ.10 மற்றும் ரூ.20 தரிசன டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவபெருமான தரிசனம் செய்தனர். காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நடராஜன்,ம மேலாளர் சுரேஷ், மற்றும் கோயில் நிர்வாகிகள் சிவகுரு,பெருமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments