அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (14.11.2024) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025க்கான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025 ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/ பெயர் நீக்கம் செய்ய/பெயர் திருத்தம் செய்ய / முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையே படிவம் 6, 6A, 7 மற்றும் 8 அளிக்கலாம். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்தார்.
Democratic Similar Entry (DSE) ஓரே மாதிரி பெயர் மற்றும் உறவினர் விவரங்கள் உள்ள வாக்காளர்களின் விவரங்களை கணினி மூலம் கண்டறிந்து அவைகளை ஒப்பிட்டு சரிசெய்யும் பொருட்டு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிப்பு படிவம் அனுப்பி தவறான பதிவினை நீக்கம் செய்திட தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Democratic Similar Entry (DSE) ஓரே மாதிரி பெயர் மற்றும் உறவினர் விவரங்கள் உள்ள வாக்காளர்களின் முகவரிக்கு வரப்பெறும் தபால்கள் குறித்து வாக்காளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார்.
இறந்த நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி மட்டுமே பெயர்களை நீக்கம் செய்ய முடியும். அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் சம்பந்தப்பட்ட வாக்குசாவடி மையங்களில் முகாம் நடைபெறும் நாட்களில் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து வாக்காளர்களும் இம்முகாமினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மேற்படி முகாம்களை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments