Breaking News

ஏரிகளில் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டத்தின் கீழ் 27 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது - கொட்டவாக்கம் ஏரியில் ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம், நவ.23:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டவாக்கம் மூலப்பட்டு ஏரியில் 13 ஆயிரம் மீன்குஞ்சுகளை விட்டு மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டத்தினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்தார்.இதன் தொடர்ச்சியாக மதுராநல்லூர் ஏரியில் 14 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.


மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டத்தின் கீழ் 150 ஹெக்டேர் பரப்பளவில் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி 6 மாதம் வரை நீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு தகுதியான நீர்ப்பரப்பில் ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் எண்ணிக்கை வீதம் கணக்கிடப்பட்டு மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகிறது.இம்மீன்குஞ்சுகள் ஆத்தூர் அரசு மீன் பண்ணையிலிருந்து 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை நன்கு வளர்ந்தவை கொண்டு வரப்பட்டது.

இவை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டவாக்கம் மூலப்பட்டு ஏரியில் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டத்தின் கீழ் கட்லா,ரோகு வகையிலான 13 ஆயிரம் மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விட்டார்.

இதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் ஒன்றியம் மதுராநல்லூர் ஏரியில் 7 ஹெக்டேர் பரப்பளவில் 14 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகளையும் மீன்வளத்துறையினர் விட்டார்கள்.இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments