கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு திருவிழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா அரங்கம் மைதானத்தில், இன்று (09.11.2024) கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு திருவிழா நிகழ்வில் விருது பெற்ற கலைஞர்கள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் முரசு கொட்டி துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி தெரிவித்ததாவது:
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஏழு மாவட்டங்களில் கலை பணிகளை ஒருங்கிணைக்கும் மண்டலக் கலை பண்பாட்டு மையம் செயல்படுகிறது. இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் முறையாக பயிற்றுவிக்கும் நோக்கில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம்,தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளில் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள 79 மாணவ / மாணவியர் இசை மற்றும் நாட்டியம் முழு நேரமாக பயின்று வருகின்றனர்.
பள்ளி செல்லும் சிறார்கள் பயன் பெறும் வகையில் பகுதி நேரக்கலை பயிற்சி வழங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்படுகிறது. இம்மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கீபோர்ட் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த கல்வியாண்டு முதல் அரசு 25 இடங்களில் பகுதிநேரக் கிராமியக்கலை பயிற்சி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இசை பள்ளி வளாகத்தில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில் கட்டைக்கூத்து, கூத்து மத்தளம் , புலியாட்டம், பம்பை போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இம்மையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். ஒராண்டு பயிற்சி முடிவில் பல்கலைக்கழகத் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சென்னை மாநகரத்தில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினையொட்டி ‘’சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, 4 நாட்கள், 18 இடங்களில் நடைப்பெற்றது.
இவ்விழா அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினை பெற்றதால், 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது சங்கமம் கலை விழா சென்னை மற்றும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
எட்டு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் நம்ம ஊரு திருவிழா, காஞ்சிபுரம் சங்கமம் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டதைச் சேர்ந்த 400 கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்டக்கலை மன்றம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களுக்கு 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பபடுகிறது.
இன்று இவ்விழாவில் கலைத்துறையில் சாதனைப்படைத்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்கான கலை விருதுகள் 30 கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் கலைஞர்கள் மாநில அளவிலான விருதுகளும் தேசிய விருதுகளும் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்கள் தெரிவித்ததாவது:
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு நம்ம ஊர் திருவிழாவினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் இவ்விழா மற்றும் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கும் நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் வருவதற்கு இந்நிகழ்ச்சி தூண்டுகோலாக அமையும் என நம்புகிறோம்.
இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழர்களின் கலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றடைந்து, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கப்படுகின்றன. இத்தகைய அரிய வாய்ப்பினை எங்களுக்கு வழங்கி பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது கலை குடும்பத்தினர் சார்பாக உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் திரு.பா.ஹேமநாதன், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் திரு.சி.நீலமேகன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments