ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நிறைவேற்ற காலனி துடைக்கும் பேராசிரியர்!
காஞ்சிபுரம், நவ.3:
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல வெளியூர்களுக்கு சென்று முக்கிய இடங்களில் அமர்ந்து அங்கு வருவோரின் காலனிகளை துடைத்து ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நிறைவேற்றி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் வசித்து வருபவர் செல்வக்குமார்(44) இவர் தனியார் கல்லூரியில் உதவி தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தான் வசித்து வரும் பாடிய நல்லூரில் அன்னை தெரேசா பள்ளி என்ற ஒன்றை தொடங்கி அதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.
ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமர்ந்து அப்பகுதியில் வருவோரின் காலனிகளை துடைத்து மெருகூட்டும் பணியை செய்து வருகிறார்.
அதிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலனி துடைத்துக் கொண்டிருந்த அவர் இது குறித்து மேலும் கூறியது.
எனது 23 வது வயதில் பாடியநல்லூரில் அன்னை தெரேசா பள்ளி ஒன்றை உருவாக்கி அதில் ஆதரவற்ற குழந்தைகள்,தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள் என 128 பேர் படித்து வருகின்றனர்.
இப்போது எனக்கு 44 வயதாகிறது. தொடர்ந்து 21 ஆண்டுகளாக நான் ஆரம்பித்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக காலனிகளை துடைத்து மெருகூட்டி அதிலிருந்து கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி வருகிறேன்.
பல சமூக சேவை அமைப்புகளும் எனக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன.ஆந்திரம்,பாண்டிச்சேரி, கர்நாடகம் மற்றும் பல இடங்களுக்கும் சென்று காலனிகளை துடைக்கும் பணியினை செய்து வருகிறேன். இச்சேவை எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது என்றும் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments