காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களை பார்வையிட்ட அரசுக்கல்லூரி மாணவர்கள்
காஞ்சிபுரம், அக்.20:
விழுப்புரம் அரசுக்கல்லூரியில் வரலாறு பயிலும் மாணவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்க கோயில்களை பார்வையிட்டனர்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய செயலாளரும்,பேராசிரியருமான ரமேஷ் தலைமையிலான குழுவினர் முதலில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலைப் பார்வையிட்டனர்.
அக்கோயிலில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் இருந்தன. அதில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னோடியாக இருந்த குட ஓலை முறை இருந்துள்ளது என்பதை கண்டு வியந்தனர்.பராந்தக சோழ மன்னன் காலத்தில் குடவோலை முறை இருந்துள்ளது அவர்களுக்கு தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் கட்டிடக்கலை சிறப்புகளையும், அந்த ஆலயத்திலிருந்த பல்லவர், சோழர் கால மன்னர்களது கல்வெட்டுக்கள் இருந்ததையும் படித்துப் பார்த்தனர்.
பின்னர் உக்கல் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம், மாமண்டூர் குடவரைக் கோயில்கள்,திருப்பருத்திக்குன்றம் சமணர் ஆலயம்,காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில்,வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்களின் கல்வெட்டுக்களையும் பார்வையிட்டனர்.
இவர்கள் பார்வையிட்ட இடங்கள் சிலவற்றில் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். முன்னதாக இவர்களை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
No comments
Thank you for your comments