Breaking News

காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம், அக்.15:

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.



காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியான பழைய ரயில் நிலைய சாலையில் ராஜாஜி மார்க்கெட் அருகில் மழைநீர் தேங்கி நின்றது.இதனை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் ஆகியோருடன் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் தேங்கி நின்ற தாழ்வான பகுதிகளை அங்கு தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

மழைநீர் தேங்கி நின்ற பகுதிளில் தாழ்வான பகுதிகளை கணக்கிட்டு ஜெசிபி இயந்திரம் மூலம் மணலை நிரப்பிடும் பணியும் நடைபெற்றது.காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பினையும் பார்வையிட்டு உடனடியாக அதனை அகற்றும் பணியும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பருவமழைக் காலத்தின் போது தேவைப்படும் மழைநீரை வெளியேற்றும் மோட்டார்கள்,மரம் வெட்டும் இயந்திரம் ஆகியனவற்றையும் எம்எல்ஏ எழிலரசன் பார்வையிட்டு அவை முறையாக வேலை செய்கிறதா என்றும் ஆய்வு செய்தார்.

மழையளவு (மி.மீட்டரில்) : 

காஞ்சிபுரத்தில் அக்.14 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 15 ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி 

மழையளவு  காஞ்சிபுரம்: 15.6, உத்தரமேரூர்: 34,வாலாஜாபாத்: 25, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் 16.2,செம்பரம்பாக்கம்: 21.

மொத்த மழையளவு: 128,

சராசரி மழையளவு: 21.3. 

மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பாலாறு வடிநில கோட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள 381 கண்மாய்களில் இரண்டு 100 சதவிகிதமும், 54 கண்மாய்கள் 76 முதல் 99 சதவிகிதமும்,89 கண்மாய்கள் 51 முதல் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. தொடர் மழை மற்றும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments