Breaking News

ஆசிய அளவிலான குத்துச்சண்டைப்போட்டியில் காஞ்சி மாணவி தங்கம் வென்று சாதனை

காஞ்சிபுரம், அக்.18:

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இருவெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


காஞ்சிபுரம் புத்தேரி பெரிய மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நீனா(21)காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் கடந்த அக்.6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வாக்கோ அமைப்பு நடத்திய ஆசியன் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்டார்.கம்போடியாவில் பெனோம் பென் நகரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 22 நாடுகளைச் சேர்ந்த 800 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து 5 பேர் உட்பட இந்தியா முழுவதுமிருந்து 45 பேர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா 55 கிலோ எடைப்பிரிவில் பாயிண்ட் பைட் என்ற பிரிவில் தங்கப்பதக்கமும்,லைட் காண்டக்ட்,பார்ம்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து சாதனை மாணவி நீனா கூ றுகையில் 

இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்தது. தமிழகத்திலிருந்து நான் மட்டுமே தங்கப்பதக்கம் பெற்றேன்.நான் தாய்லாந்து,கம்போடியா,ஈரான் ஆகிய நாடுகளின் வீராங்கனைகளோடு மோதி தங்கம் பெற்றுள்ளேன்.எனக்கு தலைமைப் பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த சுரேஷ் பாபு மற்றும் காஞ்சிபுரம் கணேஷ்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் எனக்கு ரூ.2.50லட்சம் காசோலை வழங்கி வாழ்த்தியது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக அளவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டைப் போட்டியிலும் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இருப்பதாகவும் நீனா தெரிவித்தார்.

No comments

Thank you for your comments