Breaking News

தொழிற்சாலைகளில் பணிபுரிய அதிகமான நபர்கள் தேவை - வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் பேச்சு

காஞ்சிபுரம், அக்.18:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றில் பணிபுரிய தகுதியான நபர்கள் அதிகம் தேவைப்படுவதாக வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வெள்ளிக்கிழமை பேசினார்.



காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி தொடக்கி வைத்து பேசியதாவது..

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் மாதம் தோறும் 3 வது வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம். 

இந்த முகாமில் பல பிரபலமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் மனித வள மேலாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய வருகின்றனர். 

உணவு,தங்குமிடம், போக்குவரத்து வசதி, போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தரவும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் தேவைக்கேற்றவாறு தகுதியுள்ள வேலைநாடுநர்கள் இல்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.இவற்றில் பணிபுரிய தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள்.

10,12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி,தோல்வி மற்றும் ஏதேனும் ஒரு பட்டயம் அல்லது பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதும்.நல்ல மாத ஊதியத்தில் பிரபலமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் பணிக்கு அமர்த்த தயாராக உள்ளதாகவும் ஆர்.அருணகிரி தெரிவித்தார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 175 வேலை நாடுநர்களும்,15 வேலையளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.பங்கேற்ற வேலைநாடுநர்களில் 51 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர். 

24 பேர் 2வது கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments