திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் செயல்படுகிறார்கள்- காஞ்சிபுரத்தில் அர்ஜூன் சம்பத்
காஞ்சிபுரம், அக்.10:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்திருந்தார்.அவருடன் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கே.முத்து,மாவட்ட தலைவர் கே.ஷீலா, துணைத் தலைவர் கே.சிவக்குமார், நகர்தலைவர் விஷால், பொதுச் செயலாளர் ராம்குமார் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.
தரிசனத்துக்குப் பின்னர் அவர் மேலும் கூறியதாவது:
தொழிலதிபர் டாட்டாவின் உயிரிழப்பு தேசத்துக்கு மிகவும் பேரிழப்பு. திருமணமே செய்து கொள்ளாமல் தேசத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். பல பிரபலமான தொழிற்சாலைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்.காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விடாமல் கம்யூனிஸ்டுகள் செயல்படுகிறார்கள்.
கூட்டணியில் இருந்து கொண்டே கட்சிக்கும்,ஆட்சிக்கும் விரோதமாக செயல்படுகிறார்கள்.திமுக அரசு இப்பிரச்சினையை கவனமாக கையாவில்லையெனில் சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு சென்று விடலாம். இதே நிலை தொடர்ந்தால் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்க தயக்கம் காட்டுவார்கள்.
மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது திமுகவின் நிர்வாகக் கோளாறே காரணம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு என்பது போதாது.ரூ.25 லட்சமாவது இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.
ஏனெனில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10லட்சம் வழங்கியிருக்கிறது திமுக அரசு.காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் உட்பட பல மாநகராட்சிகளில் திமுக கவுன்சிலர்களே திமுகவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவும் திமுக அரசுக்கு வரும் 2026 தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments