Breaking News

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே போட்டித் தேர்வுக்கும் தயாராகி விட வேண்டும் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பேச்சு

காஞ்சிபுரம் :

அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே அதற்காக தயாராகி விட வேண்டும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என்.வெங்கட ரமணன் திங்கள் கிழமை பேசினார்.




காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் மகா சுவாமிகள் கலையரங்கத்தில் சங்கரா போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி மையம் தொடங்குவதற்கான அறிமுக வகுப்பு நிகழ்வு நடைபெற்றது. 

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர்கள் பாலாஜி,ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கணிதத்துறை தலைவர் வீரசிவாஜி வரவேற்று பேசினார்.

நிகழ்வில் போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சிக் கையேடை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என்.வெங்கடரமணன் வெளியிட அதனை முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வெங்கடரமணன் பேசியதாவது..

வடமாநிலங்களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே போட்டித் தேர்வர்களுக்கு அவர்கள் தயாராகி விடுவதால் பலரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு தான் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணம் வந்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

எனவே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதாவது போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி விட வேண்டும்.குரூப் 4 தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்.ஆனால் 60 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது.

கல்வியறிவு, அனுபவம்,திறமை இவை மூன்றும் போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் அவசியம் என்றும் பேசினார்.நிறைவாக பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments