கொரோனா நோய்த்தொற்றுக் காலத்திலும் சிறப்பாக ஆட்சி நடத்தியது அதிமுக - எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
காஞ்சிபுரம், அக்.26:
காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகில் அதிமுகவின் 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின்,முன்னாள் எம்எல்ஏக்கள் மைதிலி திருநாவுக்கரசு. வாலாஜாபாத்.பா.கணேசன்,மதனந்தபுரம் கே.பழனி, முன்னாள் எம்பி.காஞ்சி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசியதாவது..
கொரோனா நோய்த்தொற்று 11 மாத காலம் தமிழகத்தினை ஆட்டிப் படைத்த போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது விலையில்லாமல் அரிசி,சர்க்கரை, மளிகைப் பொருட்கள் என கொடுத்தோம்.இதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வரை செலவு செய்தோம்.விலை மதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றினோம்.
தமிழகம் சிறப்பாக செயல்படுவதாகவும்,பிற மாநிலங்களும் அதைப் பின்பற்றுமாறும் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார்.நிதி இல்லாத அந்த நேரத்திலும் மக்கள் நலனில் முக்கிய கவனம் செலுத்தி சிறப்பாக ஆட்சி செய்தோம்.
11 மருத்துவக் கல்லூரிகள்,6 சட்டக் கல்லூரிகள்,ரூ.1000 கோடியில் கால்நடைப் பூங்கா,40 கலை அறிவியல் கல்லூரிகள்,அதிகமான பள்ளிகள் ஆகியனவற்றை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 145 தேசிய விருதுகள் பெற்றோம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல் முதலாக காஞ்சிபுரத்தில் மணிமங்கலத்தில் குடிமராமத்து திட்டத்தை தொடக்கி வைத்தோம்.அதன் பின்னர் பொதுப்பணித்துறையின் 8 ஆயிரம் ஏரிகளும்,ஊராட்சி ஒன்றிய ஏரிகள் 26 ஆயிரமும் தூர் வாரப்பட்டது.
அதனால் தான் இன்றும் மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு ஏரிகளும், குளங்களும் நிரம்பி இருக்கின்றன. அதிமுகவில் மட்டும் தான் ஒரு சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளர் வரை ஆக முடியும். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்.
அண்ணாவின் கனவை நிறைவேற்றுவதற்காக தொடங்கப்பட்டதே அதிமுக என்ற மாபெரும் இயக்கம். அதைக் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா.இப்போது ஒன்றாக இணைந்து கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
உழைப்பவர்களுக்கு, சாதாரண தொண்டர்களுக்கு மரியாதை தரும் ஒரே கட்சி அதிமுக. ஆனால் திமுக கூட்டணி பலத்தை நம்பியே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சத்துணவுத் திட்டம் தந்தார்.இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்தார்.அந்த திட்டத்தை கருணாநிதி கேலி செய்தார். அந்த திட்டத்தை எந்த சூழ்நிலையிலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தி விட முடியாது. அதன் பின்னர் முதல்வராக வந்த ஜெயலலிதா விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மடிக்கணினி என அனைத்தும் வழங்கினோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. கல்வியில் மாணவச் செல்வங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே மடிக்கணினி திட்டம் என்றும் பேசினார். முன்னதாக கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் வெள்ளி செங்கோலை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர். எஸ்.செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூர் நகர் செயலாளர் போந்தூர். ஏ.மோகன், ஒன்றிய செயலாளர்கள் எறையூர். இ.பி.முனுசாமி,சிங்கிலிப்பாடி ராமச்சந்திரன், இருங்காட்டுக் கோட்டை சிவக்குமார் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments