தொலைத்தொடர்பு சாதனங்களை திருடி விற்ற வடமாநில கும்பல் - காஞ்சிபுரத்தில் 6 பேர் உட்பட மொத்தம் 29 பேர் கைது
காஞ்சிபுரம், அக்.23:
தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் தொலைதொடர்பு சாதனங்களை திருடி வடமாநிலங்களில் விற்ற கும்பலில் காஞ்சிபுரத்தில் 6 பேர் உட்பட மொத்தம் 29 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் வடக்கு மண்டலப் பகுதிகளில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிறுவியுள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களில் பொருத்தியிருந்த தகவல் பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான சாதனங்கள் தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புகார்கள் வந்தன.இதனால் தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் டேட்டா கனெக்டிவிட்டி பாதிப்படைவதும் தெரியவந்தது.
கடந்த இரு ஆண்டுகளாக திருடப்பட்டு தமிழகத்திலும் வடமாநிலங்களிலும் விற்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.இது தொடர்பாக வடக்கு மண்டலங்களில் உள்ள 10 மாவட்டங்களில் 185 குற்ற வழக்குகள் தகவல் தொடர்பு சாதனங்கள் திருடப்பட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருந்தன.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு டிஎஸ்பி செ.புகழேந்தி கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லட்சுமிபதி,பாபு,பேசில் உட்பட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்தனர். இக்குற்றவாளிகளில் பலர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த எலெக்டிரானிக் கழிவுகள் விற்பனை செய்யும் நபர்களுடன் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.திருடப்பட்டவை வடமாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
துப்பு துலக்கப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட எஸ்பிக்களும் நேரடி கண்காணிப்பில் தனிப்படைகள் அமைத்து அவ்வழக்கு தொடர்பான எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்த வழக்கு சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களான காமில்(28) கம்செத்(33) நதீம் மாலிக்(32) முகம்மது அபித்(27) என்ற 4 பேர் உட்பட மொத்தம் 29குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இவர்களில் விழுப்புரம் தனிப்படையினர் 6 பேர்,ராணிப்பேட்டை தனிப்படையினர் 7 பேர், திருவண்ணா மலை மாவட்ட தனிப்படையினர் 10 பேர், காஞ்சிபுரம் தனிப்படையினர் 6 பேர் உட்பட மொத்தம் 29 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் எஸ்பி கே.சண்முகம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சுப்பராயர் தெருவில் வசித்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களான ஜமீல்(40) ஷகில்(35) மற்றும் வேலூர் வெங்கடேசன்(50) ராணிப்பேட்டை ஜாபர்கான்(29) காஞ்சிபுரம் திருமலை(40) செங்கல்பட்டை சேர்ந்த இசக்கி துரை(38) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments